Friday, December 21, 2007

நீயே நிலா.. நிலாவே நீ!

வானத்தில் நீந்திக்
கொண்டிருக்கிறது நிலா
நடுங்கியபடியே
ரசித்துக் கொண்டிருக்கிறாய் நீ

*
நீ இல்லாத
பகல்கூட நிலவில்லாத
இரவுதான் எனக்கு

*
நிலாவை ரசிக்க வாசல் வந்தேன்
எனக்கு முன்னே வளர்பிறையாய் நீ
தேயத் தொடங்கினேன் நான்
எதை ரசிப்பது என்ற குளப்பத்தில்

*
நீ நிலாவை ரசிக்காமல்
தூங்கமாட்டாய்
என்பதில் பெருமை நிலாவுக்கு

நீ ரசித்த நிலாவை
வழியனுப்பும்வரை நான்
தூங்குவதில்லை என்பதில்
பெருமை எனக்கு

*
உனக்கு முன்னே
சிலர் குறுக்கே
போய்க்கொண்டிருந்தார்கள்

என்ன செய்வது நிலாவை
மறைக்கும் சொற்ப நேரத்தில்
சுகம் காணும் முகில்கள் அவர்கள்

*

இமைக்காது நிலாவை
ரசித்துக் கொண்டிருந்தாய்
முகில்களிடம் கைகள் வாங்கி
முகம் மறைத்து வெக்கப்படுகிறது நிலா

*
நடக்கும் தூரத்தில்
நிலா இல்லை எனக்கு

ஆனாலும்
உன் கால்தடத்தில்
தேய்பிறையாய் நிலாவை
காண்கிறேன் நான்

*
அமாவாசை இரவிலும்
பெளர்ணமி நிலவாய்
என்றும் நீ எனக்கு

-யாழ்_அகத்தியன்

1 comment:

மாறன் said...

Vanakam ,

kavithaigal vaasitheen ellam
Ultimate. nice word joins and make lot nice meanings ....write more

take care
your blog reader