Monday, March 17, 2008

அன்னையே தெய்வம்...[02]

ஆயிரம் கைகள்
சேர்ந்து செய்த
மெத்தையில்
படுத்திருக்கிறேன்

உன் இருகையில்
மட்டும்தான்
தூங்கி இருக்கிறேன்


*
அம்மா உனக்கு
அவ்வளவு பாரமாய்
இருந்தேன் என்றா

பால் கொடுத்து
என்னை வளர்த்தாய்

நீ தூக்கவே
முடியாதளவுக்கு

*
வெற்றி பெற்றால்
தேடி வந்து வாழ்த்த
ஆயிரம் உறவுகள்

தோற்றுப்போனால்
தேடி வந்து அணைக்க
உன்னைத் தவிர யார்
எனக்கு

*

ஆயிரம் முறை
தலை சீவிய
சந்தோசம்

நீ
ஒரே ஒரு தடவை
தலை கோதிவிடும்போது

*
எல்லாம் சேலைதான்
எனினும்

நீ
கட்டிய சேலையில்தான்
என் நிம்மதியான தூக்கம்
அவிழ்ந்து கிடக்கிறது

*

என்னை நடக்க வைத்துப்
பார்க்க வேண்டும்
என்ற ஆசையை விட

நான் விழுந்து விடக்கூடாது
என்ற கவனத்தில்தான் இருந்தது
உன் தாய்ப்பாசம்



-யாழ்_அகத்தியன்

அன்னையே தெய்வம்...!

தாயே அன்று
உந்தன் மடியில்
மறந்து போன

என் எல்லா சோகமும்
ஒன்று சேர்ந்து
என்னைக்கொல்கிறது

எனைத் தூங்க வைக்க
தூரத்தில் நீ என்பதால்

*
இந்த உலகில் எந்த
மூலையிலும்
கிடைக்கவில்லை

உந்தன் கருவறையில்
கிடைத்த எனக்கான
பாதுகாப்பு

*

என் மேலான உந்தன்
கவனத்துக்காகவே

எத்தனை முறை
வேண்டுமானாலும்

குழந்தையாய்
பிறக்கலாம்
உனக்கு நான்

*

எந்தப் பாசப்படியைக்
கொண்டு நிறுத்தாயோ
தெரியவில்லை

உன் எல்லா
குழந்தைக்கும்

ஒரே அளவிலான
அன்பையே
காட்டுகிறாயே

*

என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்து
கொண்டேன்

நான் பிறக்க
நீ தாங்கிய
பிரசவ வலியை

*
உன்னில் தடுக்கி
விழுந்தபோதும்

உன் பக்தனாய்
அம்மா
என உன்னையே
அழைத்தபடி
விழுந்திருக்கிறேன் நான்

*
நான்
பார்த்திருக்கிறேன்

உன் கண்
வலிக்காக அழாமல்

என் மேல்
விழுந்த தூசிக்காய்

நீ கண்ணீர்
சிந்தியதை

*
அன்று
நிலாவைக் காட்டி
நீ சோறு ஊட்டையில்

அருமை அறியாமல்
உன் கையை தட்டி
விட்டிருக்கிறேன்

இன்று
நிலாவும் இருக்கிறது
சோறும் இருக்கிறது

தூரத்தில் உன் கை
அம்மா
ரொம்பப் பசிக்கிது



-யாழ்_அகத்தியன்

Sunday, March 16, 2008

இலக்கியமானவளே...!

எந்தக் கவிதையும்
என்னவள்போல்
எழுத வைத்ததில்லை

*
என்னவள்போல் எந்தக்
கவிதையும் என்னைக்
கவிஞனாக்கியதில்லை

*
அவள் தேடிய வாசகன் நான்
என்பதைவிட எனக்கான கவிதை
அவளே என்பதே மிகச் சரியானது

*
என்னால் எழுதவே
முடியாத கவிதை
அவள் என்றாலும்

அவளால் வாசிக்கப்படும்
கவிஞன் நான்

*
எந்தக் கவிதைக்குமான
சொந்தக்காரன் நானல்ல
எனக்கேயான கவிதையை
சொந்தமாக்கிய கவிஞன் நான்


-யாழ்_அகத்தியன்

வரமானவளே...!

என் கனவே நீ என்பதால்தான்
கலைந்துபோகும் உறக்கத்தை
விரும்புவதில்லை நான்

*
உன் விழிகளுக்கு
இமையாக மட்டுமல்ல

உன் உறக்கத்தில்
உன்னைக் காக்கும்
விழியுமாவேன் நான்

*

நீயே எனக்கான கவிதை
என்பதைக் கண்டறிந்ததில்
கிறுக்கன் நான் கவிஞனானேன்
உனக்காய் உலகுக்கு

*
ஆயிரம் கவிதை எழுதிக்
கிறுக்கனானேன்

உன் பெயர் எழுதி
கவிஞனானேன்

*உனக்கான கவிதை என்று
தெரிந்தும் எனக்கா என நீ
கேக்கும் அழகுக்காகவே

எத்தனை கவிதையும்
எழுதலாம் நான்



-யாழ்_அகத்தியன்

மனமானவளே..!

உன் கோடி முத்தங்களையும்
தோற்கடித்துக் கொண்டிருக்கும்
பெருமையில் இன்றும் இனிக்கிறது
உன் முதல் முத்தம்

*
உனக்கும் கவிதைக்கும்
அப்படி என்ன கோபம்
சேர்ந்து வராதளவுக்கு

*
காதலைக் கொண்டாட
வருசத்தில் ஒரு நாள்தான்
காதலர்தினம் என்றால்

அத் தினத்தையே
வருசம்பூரா கொண்டாடுவேன்
உன்னோடு நான்

*
என்னை கவிஞனாக்கியதன்
பெருமை உலகுக்குரியது

எனக்கான கவிதை நீ
என்பதின் பெருமை
எனக்குரியது

*
நான் உறங்கா நேரத்தில்
என் விழியாய் நீ

நீ கனவு காணும் நேரத்தில்
உன்னைக் காணும்
விழியாய் நான்


-யாழ்_அகத்தியன்